விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

தேடி வந்த தெய்வம் இயேசு

நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர் மேல் (இயேசுவின் மேல்) விழப்பண்ணினார். ஏசாயா:53:6

மனுக்குலம் ஆடுகளைப்போல வழிதப்பிதிரிந்த வேளையிலே, தேவன் தாம் உண்டாக்கின மனிதனுக்காக அவர் மனஸ்த்தாபப்பட்டார். வல்லமையான தேவன் வழிதப்பிப்போன ஆட்டை போல இருந்த மனிதன் தம் அண்டை திரும்பி விடுவான் என எதிர்பார்த்தார். ஆனால் ஆடுகள் தேவனுடைய குரலுக்கு செவி சாய்க்க வில்லை. ஆடுகள் தேவனின் அன்பை புரிந்து கொள்ளும்படியாய் பரிசுத்தமான, பாவமே அறியாத ஒரு ஆட்டை, தொலைந்து போன ஆடுகளை மீட்கும் படியாய், பொல்லாத மிருகங்கள் நிறைந்த உலகிற்கு அனுப்பினார். சுருக்கமாக சொன்னால், இயேசுவை நமக்காக இந்த உலகத்திற்கு பலி ஆடாய் அனுப்பினார். தேவன் நம்மீது வைத்த அன்பு மிகவும் பெரியது. தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி,இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். - யோவான் 3:16

மனுஷக்குமாரன் இயேசு நமக்காக நம்முடைய பாவங்களை அகற்றி நம்மை இரட்சிப்புக்குள் வழி நடத்த, எல்லாவற்றிலும் நம்மை போல் மனிதராகி இந்த உலகத்திற்கு வந்தார். நாம் நடக்க வேண்டிய வழியை நமக்கு போதித்து சென்றார். அவர் மனம்திரும்பின, அவரோடு கூட இருந்த 99 ஆடுகளோடு கூட அவர் சந்தோஷமாய் இருந்திருக்கலாம். ஆனால் அவரோ அந்த 99ஆடுகளை விட்டு விட்டு காணாத ஒரு ஆட்டைத் தேடி இந்த உலகத்திற்க்கு வந்தார். அதுவும் காணாத ஆட்டைத் தேடி பலி ஆடாய் இந்த உலகத்திற்கு வந்தார். தேவனை விட்டு தூரமாய் போய், காணாது போன நிலைமையில் இருந்த அநேக ஆடுகளை தமது மந்தையில் சேர்க்கும் படியாய் தமது கொடுக்கவும் தயங்க வில்லை. நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன்ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான் (யோவான் 10:11) என்று சொல்லி இயேசு தன்னுடைய ஜீவனையே ஆடுகளுகாய் கொடுத்தார். சத்துருவானவன் எவனை விழுங்கலாமோவென்று சுற்றித் திரிகிற இக்காலங்களில் நாம் இயேசுவினுடைய அடைக்கலத்தில் வந்து விட்டால் நம்மை அவருடைய கரத்திலிருந்து யாரும் பறித்துக் கொள்ள முடியாது . நாம் சில நேரங்களில் சத்துரு நமக்கு வைத்திருக்கும் குறியை அல்லது வலையை அறியாதவாறு வலியப் போய் சிக்கிக் கொள்கிறோம். ஆனால் கர்த்தர் நம் மேய்ப்பனாக இருந்தால் எந்த வித சத்துருவும் நம்மை அனுகமுடியாது மேலும் பலவித ஆசீர்வாதங்களை  நாம் பெற்றுக்கொள்ள முடியும். காணாது போன ஆடுகள் கிடைத்தவுடன் இயேசு மிகவும் சந்தோஷப்பட்டார். ஆம்,மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். (லூக்கா:15:7).

நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை உணர்வோம். 99ஆடுகளுக்குள் இருக்கிறோமா? அந்த சிதறிப் போன வழி தப்பிப்போன ஆடாக இருக்கிறோமா? சிதறிப் போன ஆட்டைப் போல்இருப்போமானால் நமக்காக அடிக்கப்பட்டு நொருக்கப்பட்டு நமக்குசமாதானம் கொடுக்க வந்தவரை நோக்கிப் பார்ப்போம். இப்போதும்கூட அவர் பிதாவினிடத்தில் நமக்காக பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார். இந்த பாவமான உலக சிற்றின்பங்களில் இருந்து வெளிவர முடியவில்லை என்று கலங்கி நிற்கத் தேவையில்லை. அவர் நமக்காக அனுப்பின தேற்றரவாளனை(பரிசுத்த ஆவியானவரைஅழைப்போம். நிறைவானது வரும் போது குறைவானது நம்மை விட்டு போய் விடும். வெளிச்சம் நமக்குள்ளாக வரும் போது நம்மை விட்டு போய் விடும். இயேசு கிறிஸ்து நியாதிபதியாய் வரும் நாள் மிகவும் சமீபித்து விட்டது. அநேக மக்கள்அப்படியெல்லாம் எதுவுமே நடக்க போவதில்லை என்று நினைத்து தங்கள் மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.இப்படிப்பட்ட மக்கள் மத்தியில் வாழும் நீங்களும் நானும் பாவத்திலே விழுந்து அநேக முறை கர்த்தரை விட்டு தூரமாய்ப் போகின்றோம். ஆனால் கர்த்தரோ நம்மேல் நினைவாய் இருந்து நம்மைத் தேடி மீண்டும் வருகிறார். நாம் அவருடைய குரலைக் கேட்டு அவரிடத்தில் ஓடி வந்து விடுவோம் என்று ஆவலுடன் பொறுமையோடு காத்து நிற்கின்றார். ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.(2பேதுரு 3:9). இயேசுவின் குரலுக்குச் செவி கொடுத்து, அவருடைய மந்தையில் அடங்கி வாழ நம்மை அர்ப்பணிப்போம். பிறரையும் மந்தையில் சேர்த்து பரலோகத்தை ஆத்துமக்களால் நிரப்ப முயலுவோம்! பரலோகத்தில் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்குவோம்! ஆமேன்! அல்லேலூயா!

எங்களை நேசித்து வழிநடத்தும் தெய்வமே, இயேசுவே, நான் சுகமோடும் பாதுகாப்போடும் வாழ்வதற்காய் நீர் சிலுவையில் பலியானீர். அநேக முறை உம்முடைய மந்தையை விட்டு தூரமாய் சென்றேன். ஆயினும் உமது மாறாத கிருபை என்னை காப்பாற்றியது. இந்த நேரத்திலிருந்து நான் உம்முடைய மந்தையின் ஆடாய் நான் வாழ விரும்பி என்னை அர்பணிக்கின்றேன். இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வேண்டுகிறேன், நல்ல பிதாவே, ஆமென்!

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

0 Response to " தேடி வந்த தெய்வம் இயேசு "

Post a Comment