விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

நாமே அந்த பாக்கியவான் (11 June 2014)



"எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான். எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ அவன் பாக்கியவான்." சங்கீதம் 32:1,2.

ஒரு மனிதன் தன் பாவத்தைக் குறித்த குற்ற உணர்வினால் (குற்ற மனசாட்சியினால்) வாதிக்கப்படுவதே உண்மையில் அவன் அனுபவிக்கக்கூடிய பாடுகளிலெல்லாம் மிகப் பெரிய பாடாகும். குற்ற உணர்விலிருந்து விடுதலையாக்கப்படுவதே உண்மையில் அவன் அனுபவிக்கக்கூடிய விடுதலைகளிலெல்லாம் மிகப் பெரிய விடுதலையாகும். அறிக்கை செய்யப்படாத பாவங்களே குற்ற உணர்வை வருவிக்கின்றன. நீங்கள் ஒரு வேளை திடீர் திகில், மரண பயம், நிராசை, உள்ளான சமாதானமின்மை, அடிக்கடி சடுதியாக வெடித்து வெளிவரும் கோபம், தூக்கம் கலைதல் ஆகியவற்றினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பீர்களாயின், அவற்றுக்கான ஒரு காரணம், அறிக்கை செய்யப்படாமல் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஏதோ ஒரு பாவமாயிருக்கக் கூடும்.

இந்த சங்கீதம் மார்ட்டின் லூதர் அவர்களுக்கு மிகவும் விருப்பமான ஒரு சங்கீதமாயிருந்தது. இரட்சிக்கப்படுவதற்கு முன்பு மிகவும் பொல்லாத மனுஷனாயிருந்த பரி.அகஷ்டின், தான் இரட்சிக்கப்பட்ட பின்னர் இந்தச் சங்கீதத்தைத் தன்னுடைய படுக்கையறையின் சுவரில் எழுதி வைத்து, அடிக்கடி அதை வாசித்து அழுதாராம். இச்சங்கீதம் பாவ அறிக்கையைக் குறித்த சில முக்கியமான சத்தியங்களை நமக்குப் போதிக்கிறது. "எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான்." சங்கீதம் 32:1 மன்னிப்பைப் பெற்ற ஜனங்கள் மெய்யாகவே ஆசிர்வதிக்கப்பட்டவர்களாவர். நாம் நம்முடைய பாவங்களை மூடி வைக்கும் வரை, தேவன் அவைகளை மூடி மறைக்க மாட்டார். ஆனால் நாம் மனஸ்தாபப்பட்டு அவைகளை அறிக்கை செய்யும்போது, தேவன் நம்மை சுத்திகரித்து, என்றென்றைக்குமாக நம்மை மன்னித்துவிடுகிறார்.

எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ அவன் பாக்கியவான்." சங்கீதம் 32:2. "எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ" என்பது, 'எவனுடைய ஆவி முழுமையாக அறிக்கை செய்திருக்கிறதோ' என்று பொருள்படும் என Moffat மொழிபெயர்ப்பு கூறுகிறது. 'அறிக்கை' என்னும் வார்த்தைக்குரிய கிரேக்க பதம் 'ஹோமோலோஜியோ' (homologeo) என்பதாகும். 'அதே காரியத்தைப் பேசு' என்பதே அதன் பொருளாகும். சிலர் அறை மனதுடன் பாவ அறிக்கை செய்வதுண்டு. அதாவது அவர்கள் பாவத்தை அறிக்கை செய்யும்போது, முழுமையான உண்மையைக் கூறுவதில்லை. வேறு சிலர் தாங்கள் செய்த ஒரு குற்றத்தைத் தாங்களே செய்ததாக முழுமையாக ஒத்துக்கொள்ளாமல் தங்கள் குற்றத்திற்கு வேறொருவரையோ அல்லது வேறொன்றையோ ஒரு பகுதியாவது காரணங்காட்டி (குற்றப்படுத்தி) அறிக்கை செய்கிறார்கள். ஆனால் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு பாவம் வெளியரங்கமாகவும், மெய் மனஸ்தாபத்துடனும், சரியான விதத்திலும் அறிக்கை செய்யப்பட்ட மாத்திரத்தில், கிறிஸ்தவ ஜீவியம் மிகவும் இலகுவானதாக மாறிவிடுகறது - பாவத்தினாலும் குற்றமனப்பான்மையினாலும் உண்டாகிற பாரம் அகன்றுபோகிறது!

ஜெபம்: எங்களுடைய பாவங்களுக்காக சிலுவையில் மரித்து, எங்களை வாழ வைப்பதற்காக உயிரோடு எழுந்த இயேசுவே, பாவ உலகில் வாழும் என்னை கண்நோக்கி பாரும். நான் செய்த பாவங்களை மன்னித்தருளும். நொறுங்குண்ட இருதயத்தை புறக்கனியா தேவனே, என்னை உமது கரங்களில் வைத்து பாதுகாத்து கொள்ளும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் தந்தையே. ஆமேன்

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

http://www.vvministry.com/sms_email.html --

2 Responses to " நாமே அந்த பாக்கியவான் (11 June 2014) "

  1. Why no dynam oru diyannam for last few days.please continue.
    .

    ReplyDelete
  2. Why no dynam oru diyannam for last few days.please continue.
    .

    ReplyDelete