விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

அப்போஸ்தலர் அந்திரேயா

இயேசுவின் பன்னிரெண்டு சீடருள் அந்திரேயா இயேசுவை முதலில் அறிந்தவனும், அழைப்பை பெற்றவரும் ஆவார். அந்திரேயா என்றால் மனிதத்தன்மைஎன்று பொருள். இவர் பெத்சாயிதா ஊரைச் சார்ந்தவர். பேதுருவோடு உடன் பிறந்தவர். கலிலேயாக் கடலில் மீன் பிடிக்கும் தொழிலை செய்துவந்தார். அந்திரேயா, யோவான் ஸ்நானகனின் அருளுரையை கேட்டு நண்பரோடு சென்று திருமுழுக்குப் பெற்று அவருக்கு சீடன் ஆனார். ஒரு நாள் இயேசு தன்னை நோக்கி வருவதைக்கண்ட யோவான் ஸ்நானகன் இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டிஎன்றார். இதைக் கேட்ட அந்திரேயா அவரது நண்பன் யோவானும் இயேசுவை பின்தொடர்ந்து சென்று அவருடன் அன்று தங்கினார். வீட்டிற்கு வந்தவுடனே தன் உடன்பிறந்த சீமோன் பேதுருவிடம் சென்று மேசியாவை கண்டோம்என்று சொல்லி அவரை இயேசுவிடம் அழைத்துச்சென்றார். அந்திரேயாவே இயேசுவை மேசியாஎன்று முதலில் விசுவாசித்தவர் ஆவார். பேதுருவும் அந்திரேயாவும் இயேசுவை ஏற்றுக்கொண்ட போதும் மீண்டும் மீன்பிடி தொழில் செய்து கொண்டு, சமயம் வாய்க்கும்போது இயேசுவோடு பயணம் செய்து ஊழியம் செய்து வந்தனர். சில மாதங்கள் கழித்து அந்திரேயாவும் பேதுருவும் மீன் பிடிப்பதை இயேசுகண்டு, “என் பின்னே வாருங்கள், மனிதரைப் பிடிக்கிறவர்களாய் மாற்றுவேன்என்றார். உடனே அவர்கள் வலைகளைவிட்டு அவருக்குப்பின் சென்றார்கள் (மத் 4:19-20). புதிய ஏற்பாட்டின் முதல் மூன்று நற்செய்தி நூல்களிலும் அந்திரேயாவின் பெயரானது சீடர்களின் பெயர்பட்டியலில் மட்டுமே காணப்படுகிறது. ஆனால் நான்காம் நற்செய்தி நூலாகிய யோவானில் அந்திரேயாவின் பெயரை மூன்று நிகழ்ச்சிகளில் காண்கிறோம். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அந்திரேயா யாராவது ஒருவரை இயேசுவுக்கு அறிமுகப்படுத்துகிறார்.

முதல் நிகழ்வாக, அந்திரேயா இயேசுவை மேசியா என்று அறிந்தவுடனே அதை தமது சகோதிரன் சீமோனுக்கு அறிவித்து அவரை இயேசுவிடம் அழைத்து சென்றார் (யோவான் 1:40-42). ஒரு ஆத்துமாவை ஆதாயப்படுத்தி வெற்றியும் கண்டார். இதினால் திருச்சபைக்கு பெரும்பயன் கிடைத்தது. இரண்டாவது நிகழ்வாக, பெத்சாயிதா அருகே ஒரு வனாந்திர இடத்தில் இயேசுவும் சீடர்களும் இருந்தனர். அதை கேள்விப்பட்ட ஜனங்கள் அவரிடத்தில் வந்தனர். இயேசு வந்து, திரளான ஜனங்களைக் கண்டு, அவர்கள் மேல் மனதுருகி, அவர்களில் வியாதியஸ்தர்களாயிருந்தவர்களைச்சொஸ்தமாக்கினார். சாயங்காலமானபோது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: இது வனாந்தரமான இடம், நேரமுமாயிற்று; ஜனங்கள் கிராமங்களுக்குப் போய்த் தங்களுக்குப் போஜனபதார்த்தங்களைக் கொள்ளும்படி அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: அவர்கள் போகவேண்டியதில்லை; நீங்களே அவர்களுக்குப் போஜனம் கொடுங்கள் என்றார் (மத் 14:15-16). பிலிப்பு பிரதியுத்தரமாக, இருநூறு பணத்து அப்பங்கள் வாங்கினாலும் இவர்களுக்குப் போதாதே என்றான் இந்த நேரத்தில் அந்திரேயா இயேசுவின் வல்லமையை அறிந்தவராக அவரை நோக்கி: இங்கே ஒரு பையன் இருக்கிறான், அவன் கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உண்டுஎன்றார் (யோவான் 6:7-9). பின்னர் இயேசு அந்த ஐந்து அப்பத்தையும் இரண்டு மீனையும் ஆசீர்வதித்து மக்களுக்கு பரிமாறும்படி சீடர்களிடம் கொடுத்தார். அணைவரும் வயிறார உண்டனர். பின்னர் எஞ்சிய அப்பத்தையும், மீனையும் பனிரெண்டு கூடைகள் நிறைய எடுத்தனர். எந்த சிறிய பொருளையும் இயேசுவால் பெரிய அளவில் பயன்படுத்தமுடியும் என்பதை அந்திரேயா அறிந்திருந்தார். மூன்றாவது நிகழ்வாக, இயேசுவை சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு, கிரேக்கர்கள் பஸ்கா பண்டிகைக்காக எருசலேம் வந்திருந்தனர். அவர்கள் இயேசுவைக் காணவிரும்பினர். பிலிப்பு கிரேக்க பெயரை உடையவனாக அவர்களோடு தொடர்பு உடையவனாக இருந்ததால் அவரிடம் தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர். இஸ்ரவேலில் இழந்து போனதை மீட்கவே இயேசு வந்துள்ளார் என பிலிப்பு நினைத்திருந்த படியால் அந்த கிரேக்கர்களை அந்திரேயாவிடத்தில் அழைத்து சென்றான். நற்செய்தி உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது என்று அறிந்திருந்த அந்திரேயா, அவர்களை இயேசுவினிடத்தில் அழைத்து சென்றார் (யோவான் 12:20-22). இவ்வாறு புற இனத்தவர்களையும் இயேசுவின் அண்டை சேர்த்தார் அந்திரேயா.

அந்திரேயாவின் இறுதி நாட்கள்
இயேசு பரமேரிய பின்பு அந்திரேயா, கப்பதோக்கியா, பித்தினியா, கலாத்தியா, பைசாந்தியம் (தற்போதய இஸ்தான்புள்) இடங்களில் நற்செய்தி அறிவித்து சபைகளை நிறுவினார். பின்னர் கருங்கடலின் வடபகுதியில் அமைந்துள்ள சித்தியா என்ற பகுதியில் அந்திரேயா நற்செய்தி அறிவித்தார் என தொடக்க கால வரலாற்று ஆசிரியர் எசபியஸ் (Eusebius) எழுதியுள்ள Ecclesiastical History 3.1.1 புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதிகாலத்தில் சித்தியர்கள் (Schythians) காட்டுமிராண்டிகளாகவும் நாகரீகம் அறியதவர்களாகவும், முரடர்களாகவும் இருந்தனர். இப்படிப்பட்ட மக்கள் மத்தியில் அந்திரேயா நற்செய்தியை அறிவித்ததாக ஆதிகால திருச்சபை வரலாறு கூறுகிறது.

இதன்பின்னர் அந்திரேயா கிரீஸ் நாட்டில் திரேஸ், மாசிடோனியாப் பகுதிகளில் ஊழியஞ் செய்து இறுதியாக அகாய் மாநிலத்தின் பாட்ராசு (PATRAS) என்ற பட்டணத்திற்கு வந்து அங்கேயும் ஊழியம் செய்தார். அகாய் மாநிலத்தின் ஆளுநர் ஏகீசு என்பரின் மனைவி மரணத்தை நெருக்கும் நிலையில் இருந்தாள். அந்திரேயா கிறிஸ்துவின் நாமத்தினால் அவளை சுகப்படுத்த அவள் இயேசுவை சொந்த இரட்சகராக எற்றுகொண்டாள். இது ஆளுநர் ஏகீசுக்கு பிடிக்கவில்லை. ஏகீசுவுக்கு ஸ்ட்ராட்டோகிள்சு என்ற தம்பி இருந்தார். இவருக்கு அருமையான வேலைக்காரன் ஆல்க்மேன்மரண வியாதிப்பட்டிருந்தான். அந்திரேயா கிறிஸ்துவின் நாமத்தினால் அவரையும் சுகப்படுத்த ஏகீசுவின் தம்பியும் இயேசுவை ஏற்றுக்கொண்டார். இதை அறிந்த ஏகீசு, அந்திரேயாவை சிறையில் அடைத்து சிலுவையில் அறைய உத்தரவிட்டான். அந்திரேயா அதிக வேதனை அடையவேண்டுமென சொல்லி, சிலுவையில் ஆணிகள் அடிக்காமல், கயிறுகளால் சேர்த்து கட்டச் செய்தான். பசியினாலும் தாகத்தினாலும் வருந்தி சாவதைப் பலர் காணவேண்டுமென்று அப்படி செய்தான். ஏழு ரோம சேவகர்கள் அந்திரேயாவைச் சாட்டையால் அடித்து துன்புறுத்தினர். அந்திரேயா, என் ஆண்டவர் மரித்த சிலுவை வடிவில் நான் மரிக்க தகுயற்றவன். என்னை பெருக்கல் (X) வடிவ சிலுவையில் அறைய வேண்டும்என்றார். அந்தபடியே 'X' வடிவ சிலுவையில் கயிறுகளால் இறுக்கி கட்டினார்கள். அவர் சிலுவையைக் கண்டதும், "மேன்மையான சிலுவையே, உன்னில் தொங்கி என்னை மீட்டவர், உன் வழியாய் என்னை ஏற்றுக் கொள்வாராக" என்று ஜெபித்தார். இரண்டு நாட்கள் வேதனை மத்தியிலும், சிலுவையை சுற்றி நின்றவர்களுக்கு இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்து இரத்த சாட்சியாக கிரீசு நாட்டின் பாட்ராசு நகரில் மரித்தார்.

அந்திரேயா மரித்த பின்னர் நடந்து ஸ்காட்லாந்து தேசத்தில் நடந்த நிகழ்ச்சியைப் பாரம்பரிய செய்தி கூறுகிறது. ஸ்காட்லாந்து நாட்டின் பிகட்சின் என்ற பகுதியின் அரசன் அங்கஸ், இங்கிலாந்து அரசனான அதெல்ஸ்டான் (Athelstan) உடன் போர்க்களத்தில் இருந்தான். போரின் முந்தின நாள் இரவில் பிகட்சு அரசன் அங்கசின் கனவில் அந்திரேயா தோன்றி, ‘இயேசு போரில் துணை செய்து வெற்றியளிக்க போவதாககூறியுள்ளார். அடுத்த நாள் போர்க்களத்தில் பிகட்சு படையின் நீளத்தில், வானத்தில் மிகவும் ஒளியுள்ள ஒரு சிலுவை காணப்பட்டது. இந்த சிலுவை பிகட்சு அரசன் அங்கஸ் வெற்றிபெறும் வரையில் மறையவில்லை. அன்று முதல் நீள நிற பின்னணியில், வெள்ளை நிற சிலுவை ஸ்காட்லாந்து தேசத்தின் தேசிய கோடியாக உள்ளது.

அந்திரேயா ஒரு பெரிய பிரசங்கியாக இருக்கவில்லையென்று சுவிசேஷங்களிலிருந்து தெரிகின்றது. ஆனால், அநேகரை தனிப்பட்டவிதத்தில் கிறிஸ்துவண்டையில் வழிநடத்தினான். சிலுவையில் தொங்கும் வேளையிலும் ஆத்தும பாரமுள்ளவனாய் சாட்சி பகிர்ந்தான். நாமோ நம்மிலுள்ள குறைகளைத்தான் பெரிதாக எண்ணுவோம். பிரசங்கம் செய்யத் தெரியாது, ஜெபிக்கத் தெரியாது, வேதம் படித்துக்கொடுக்கத் தெரியாது என்று எத்தனை சாக்குபோக்குகள். இதனை வாசிக்கும் நீங்கள் ஒரு நல்ல பிரசங்கியாக இல்லாதிருக்கலாம். ஆனால், தனிப்பட்டவிதத்திலே சுவிசேஷத்தை அறிவிப்பதற்கு எந்தத் திறமையும் தேவையில்லை. தேவஅன்பு இருந்தால் போதும். அதனை எல்லோரும் செய்யலாம். அந்திரேயாவைப்போல வீட்டாரைக்குறித்தும், உங்கள் சொந்த நாட்டாரைக் குறித்தும் ஆத்தும பாரமுள்ளவர்களாக இருக்கிறீர்களா?சிந்திப்போம், செயல் படுவோம்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

1 Response to " அப்போஸ்தலர் அந்திரேயா "