விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

நம்மை விட்டு விலகாத கர்த்தர் (12 June 2014)



கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் உபாகமம் 31: 8

இந்த வாக்குத்தத்த வார்த்தை மோசே யோசுவாவுக்கு கூறி பெலப்படுத்தினார். மோசே மரித்தபின்பு யோசுவாவுடன் தேவனே பேசும்போது இதே வார்த்தைகளை கூறி பெலப்படுத்தினார். நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை. நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை. (யோசுவா 1 :5) கர்த்தர் நம்மோடு கூட இருப்பது எத்தனை பெரிய ஆசீர்வாதம் என்று வேதம் சொல்லுகிறது. தேவன் ஈசாக்கோடு கூட இருந்து அவனை ஆசீர்வதித்தார். ஈசாக்கு அந்த தேசத்தில் விதை விதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான். (ஆதி 26 : 12) ஆதியாகமம் 39-ம் அதிகாரத்தை வாசித்துப்பாருங்கள். 4 முறை கர்த்தர் யோசேப்போடு கூட இருந்தார் என்று எழுதப்பட்டுள்ளது. அவன் அடிமையாக விற்கப்பட்ட இடத்திலும் தேவன் அவனோடு கூட இருந்தபடியால் போத்திபார் ஆசீர்வதிக்கப்பட்டான். சிறைச்சாலை தலைவன் கண்களில் யோசேப்புக்கு தயவு கிடைத்தது.

தாவீதின் வாழ்க்கையிலும் II சாமுவேல் 5 : 10-யை வாசித்து பாருங்கள். தாவீது நாளுக்குநாள் விருத்தியடைந்தான்; சேனைகளின் தேவனாகிய கர்த்தர் அவனோடே கூட இருந்தார். பக்தன் தாவீதின் வாழ்க்கையில் பல நெருக்கங்கள், கஷ்டங்கள் மத்தியிலும் தேவனுடைய அபிஷேகமும், அவனோடு கூட கர்த்தர் இருந்தபடியால் ஏற்ற காலத்தில் நாளுக்கு நாள் விருத்தியடைந்தான் என்று பார்க்கிறோம். யோசுவாவின் சரித்திரத்தையும் பாருங்கள். “இவ்விதமாய் கர்த்தர் யோசுவாவோடே கூட இருந்தார்; அவன் கீர்த்தி தேசமெங்கும் பரம்பிற்று”. (யோசுவா 6 : 27) வாக்குத்தத்தம் பண்ணின கர்த்தர் யோசுவாவுடன் இருந்தார். அவன் கீர்த்தி தேசமெங்கும் பரவிற்று. யோசுவா நினைத்திருக்கலாம். 40 வருடங்கள் மோசே கூட இருந்தோம். அனைத்து காரியங்கள் திறம்பட நடத்தினோம். தைரியமாக இருந்தது. ஆனால் மோசே இப்போது கடந்து போய்விட்டார். சில கால கட்டங்களில் மோசேக்கு விரோதமாக எவ்வளவுபேர் எதிர்த்தார்கள், கல் எரிந்தார்கள், தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ளாதபடி பிரிந்தார்கள். மனம் சோர்ந்துபோக வைத்தார்கள். இவ்வாறு என் அன்பான தலைவன் மோசே உடன் இல்லையே என்று அங்கலாய்த்தார்கள். ஆனால் பாருங்கள் யோசுவா 1 : 5-ல் “நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன் நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை”. என்று கர்த்தர் சொன்னார்.

மோசே இருந்த இடத்தில் இனி மனிதன் அல்ல நானே உன்னோடு கூட இருப்பேன் எவ்வளவு பெரிய வாக்குத்தத்தம்! நம்பிக்கை! மோசேயுடன் இருந்து எப்படி நடத்தினாரோ அதேபோல அதைவிட மேலாக கர்த்தரே உன்கூட இருந்து யோசுவாவை வழிநடத்தி தேசத்தை சுதந்தரிக்கச் செய்தார். அதே ஆண்டவர் நம்மை பார்த்தும் சொல்லுகிறார். நானே உன்னோடுகூட இருந்து உன்னை ஆசீர்வதிப்பேன். காத்து வழிநடத்துவேன். நம்பிக்கை தரும் தேவனுடைய வாக்குத்தத்திற்காக தேவனைத் துதிப்போம்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

http://www.vvministry.com/sms_email.html -- தினமும் உங்கள் E mail முகவரிக்கு கர்த்தருடைய செய்தியையும் வேத வசனத்தை உங்கள் மொபைலுக்கு SMS மூலமாகவும் பெற விரும்பினால் கொடுக்கபட்ட LINK-ல் உள்ள படிவத்தை நிரப்பவும்.

0 Response to " நம்மை விட்டு விலகாத கர்த்தர் (12 June 2014) "

Post a Comment